Events

Deepavali 2024 Summary

அட்லாண்டா தமிழ் மன்றத்தின் தீபாவளி கொண்டாட்டம், அக்டோபர் 19-ஆம் நாள் அன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. மன்றத்தின் உறுப்பினகர்ளும், உறுப்பினர் அல்லாதவர்களுமாக சுமார் 2000 பேர் கலந்து கொண்ட பெருவிழாவாக அமைந்தது.

இந்த ஆண்டின் தீபாவளி கொண்டாட்டங்கள், கலை நிகழ்ச்சிகளுடன் துவங்கியது. முதலாவதாக, மன்றத்தின் இளைஞர் பாடகர் குழுவின் (Youth Band) தமிழ் தாய் வாழ்த்துடன் துவங்கியது. பின்பு, சிறுவர், சிறுமியர் மற்றும் பெரியவர்கள் கலந்து கொண்ட பல்சுவை நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக அமைந்திருந்தது. பாட்டு, நடனம், நாடகம் என்று அனைத்து வகை கலை நிகழ்ச்சிகளையும், காண்போர் அனைவரும் கண்டு, கேட்டு களித்தனர். 

சுமார் 40 குழுக்களும், 420-க்கும் அதிகமானோர் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகள், மன்றத்தின் கலைக்குழுவினரால் மிக நேர்த்தியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

மன்றத்தின் தீபாவளி கொண்டாட்டத்தை பெருமை படுத்தும் விதமாக, சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். போர்சைத் மாகாண ஆணையர் குழுத் தலைவர், திரு. ஆல்பிரெட் ஜான் அவர்கள், தன் துணைவியாருடன் கலந்து கொண்டு, தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார். 
 
மன்றத்தின் தலைவி, திருமதி. பவித்ரா நடராஜன் அவர்கள், மன்றத்தின் பொறுப்பில் இருக்கும் அனைவரையும் மேடைக்கு அழைத்து பார்வையாளர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அட்லாண்டா தமிழ் மன்றத்தின் நிறுவனர்கள், 2023-2024 ஆம் ஆண்டின் செயற்குழு உறுப்பினர்களின் தன்னலமற்ற சேவையை வாழ்த்தி, பாராட்டுத் தகடுகளை (Plaques) வழங்கினர். 
 
அட்லாண்டா தமிழ் மன்றத்தின் இயக்குனர் குழு தலைவர், திரு. ஜான் அமிர்தம் அவர்கள், மன்றத்தின் பல்வேறு செயல்களை பாராட்டி பேசி, இயக்குனர் குழுவிற்கும், செயற் குழுவிற்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார். 
இந்த ஆண்டின் இறுதியில், இயக்குனர் குழுவிலிருந்து விடை பெறும், திரு. வில்சன் ஆரோக்கியராஜ் அவர்களையும், திரு. வீரமணி தங்கவேல் அவர்களையும் மேடையில் கௌரவித்து, பாராட்டு தகடுகளை மன்றத்தின் நிறுவன குழுத் தலைவர் திரு. தங்கமணி பால்ச்சாமி அவர்கள் வழங்கினார். 
 
பின்னர், 2025-ஆம் ஆண்டிற்கான தேர்தல் குழு, தேர்தல் முடிவுகளை அறிவித்தது. திரு. சிவசண்முகம் சிவக்கொழுந்து, திரு. சண்முகம் அர்த்தநாரி மற்றும் திரு. சதீஸ் குமார் கலியமூர்த்தி ஆகிய மூவர் அடங்கிய குழு , தேர்தல் முடிவுகளை அறிவித்து, தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் வெற்றிச்சான்றிதழ்களை வழங்கினர்.

தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்ற மேற்கு போர்சைத் உயர் நிலை பள்ளி மேடையும், வளாகங்களும் வண்ணமயமாக அலங்கரிக்க பட்டிருந்தது. வளாகங்களில் விற்பனைக்காக 30-க்கும் அதிகமான சாவடிகளும் (Stalls) அமைக்கப்பட்டிருந்தது.

அட்லாண்டா தமிழ் மன்றத்தின் இரண்டாம் தீபாவளியாக அமைந்த இவ்விழாவில், தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட மன்றத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் அடையார் ஆனந்த பவனில் இருந்து வரவழைக்கப்பட்ட இனிப்பு மற்றும் காரம் உள்ளிட்ட பலகாரமும் வழங்கப்பட்டது.
 
சுமார் நான்கு மணி நேரம் தொடர்ந்து நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளின் முடிவில், இரவு உணவு பரிமாறப்பட்டது. சைவம் மற்றும் அசைவம் உள்ளிட்ட அறுசுவை உணவுடன் தீபாவளி இனிப்பும் பரிமாறப்பட்டது. அத்துடன், சென்னை பைட்ஸ் நிறுவனத்தின், நடமாடும் உணவு அங்காடியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 
 
இரவு உணவுக்கு பின்னர்,அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த கல்யாண மாலை குழுவினரின் பேச்சரங்க நிகழ்ச்சி துவங்கியது. இந்த கல்யாண மாலை பேச்சரங்கத்தில், நம் அட்லாண்டா வாழ் தமிழ் பேச்சாளர்களான, திருமதி. அனிதா ராஜேஷ், திருமதி. மீனாட்சி கணேஷ் மற்றும் திருமதி. சிந்து வெங்கடாச்சலம் ஆகியோரும் கலந்துகொண்டு பேசியது பெரும் வரவேற்பைப்பெற்றது .
பின்னர், கல்யாண மாலை குழுவினரின் பேச்சாளர்கள் தங்களது சிறப்புரையை துவங்கினர். நல்ல சிந்தனைசெறிவோடும், ஆழ்ந்த மொழி ஞானத்தோடும், நகைச்சுவையோடும், அவர்களுடைய பேருரை அமைந்திருந்தது. 
 
இந்த சிறப்புரையை வழங்கிய, திரு. புலவர் ராமலிங்கம் ஐயா அவர்களுக்கும், திருமதி. பர்வீன் சுல்தானா அவர்களுக்கும், திருமதி. கவிதா ஜவஹர் அவர்களுக்கும், திரு. சுஜித் குமார் அவர்களுக்கும், இந்த குழுவை செம்மையாக வழிநடத்திய திரு. மோகன் மற்றும் திருமதி. மீரா நாகராஜன் அவர்களுக்கும், அட்லாண்டா தமிழ் மன்றத்தின் நன்றிகளையும், வாழ்த்துக்களையும் உரித்தாக்குகிறோம். 
 
அனைவரது அன்பும், ஆதரவும், பங்கேற்பும் இந்த தீபாவளி கொண்டாட்டத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாகும். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மன்றத்தின் உறுப்பினர்களுக்கும், உறுப்பினர் அல்லாதவர்களுக்கும் நன்றிகள் பல. 
மன்றத்தின் கௌரவ உறுப்பினர்களும், நன்கொடையாளர்களும் அளித்த ஆதரவு இன்றிமையாதது. 20-க்கும் அதிகமான நன்கொடையாளர்கள் இந்த விழாவுக்கு ஆதரவளித்தனர். 
 
தீபாவளி கொண்டாட்டத்திற்கு துல்லியமாக ஒலிஅமைப்பு செய்து உதவு திரு. பிரகாஷ் மற்றும் அட்லாண்டா மோஜோ (Atlanta Mojo Productions) குழுவினருக்கு எங்கள் நன்றி.
 
இந்த விழாவின் நிகழ்வுகளை புகைப்படமாக பதிவு செய்து உதவிய திரு. வெங்கட் குட்டா அவர்களுக்கு நன்றி.
 
கடந்த சில வாரங்களாக, மன்றத்தின் அனைத்து செயற்குழுக்களும் ஒன்றிணைந்து, கலந்து ஆலோசித்து, ஒற்றுமையாக பணியாற்றினர். பல குழுக்களில் இணைந்து பணியாற்றிய இளைய தன்னார்வலர்களுக்கும் நன்றி.
அரங்கத்தையும், வளாகங்களையும் மிக மிக அழகாக வடிவமைத்த திரு ஜவஹர் மற்றும் கலை குழுவினருக்கு பாராட்டுகள். 
 
இந்த நிகழ்ச்சியின் மூலம் எங்களுக்கு கிடைத்த பேராதரவையும், அன்பையும், நன்றியுடன் ஏற்றுக் கொள்கிறோம்.
 
இந்நிகழ்ச்சியின் புகைப்படங்களைக் காண இங்கே சொடுக்கவும்
 

Login

Register

terms & conditions