Activity

ஏப்.,14 தமிழ்ப்புத்தாண்டாக ஜார்ஜியா கவர்னர் அறிவிப்பு

வட அமெரிக்கா, ஜார்ஜியா மாகாண கவர்னர் பிரையன் பி.கெம், சித்திரை முதல்நாளை (14/ 04/ 2023) தமிழ்ப்புத்தாண்டாக அறிவித்து பிரகடனம் வெளியிட்டார். ஆளுநர் கெம்ப் இதற்கான பிரகடனத்தை அட்லாண்டா தமிழ் மன்ற பொறுப்பாளர்களிடம் வழங்கினார்.

அட்லாண்டா தமிழ் மன்றம் பிப்ரவரி 2023 இல் தனது பயணத்தைத் தொடங்கியது. இந்தக் குறுகிய காலத்தில் நிறைய ஆதரவைப் பெற்று மென்மேலும் வளர்ந்து வருகிறது. மகுடத்திற்கு மணி சேர்க்க, அட்லாண்டா தமிழ் மன்றம் ஜார்ஜியாவின் ஆளுநர் பிரையன் பி. கெம்பைச் சந்தித்து ஜார்ஜியாவில் ஏப்ரல் 14, 2023 நாளை தமிழ் புத்தாண்டாக அங்கீகரிக்கும் பிரகடனத்தைப் பெற்றது.

ஜார்ஜியா மாநிலத்தின்படி, “ஜார்ஜியாவின் குடியிருப்பாளர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் மாநிலம் தழுவிய ஒரு நாள், வாரம் அல்லது மாதத்தை அங்கீகரிப்பதற்காக ஆளுநரின் விருப்பப்படி பிரகடனங்கள் வெளியிடப்படுகின்றன. இந்த ஆவணங்கள் சட்டப்பூர்வமாக பிணைக்கப்பட்டவை அல்ல. இந்த ஆவணங்கள் மரியாதைக்குரியவை மட்டுமே”

ஜார்ஜியா மாநிலத்தில் வாழும் அனைத்து தமிழ் பூர்வீக குடிமக்களுக்கும் இது உண்மையில் ஒரு பெரிய மரியாதையாகும். இந்தியாவில் எஞ்சியிருக்கும் நீண்ட கால செம்மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று. தமிழ் இலக்கியம், உலகின் சிறந்த பாரம்பரிய மரபுகள் மற்றும் இலக்கியங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தமிழ் இலக்கியத்தின் ஆரம்பமான சங்க இலக்கியத்தின் காலம் கி.மு 300 முதல் கி.பி 300 வரை. சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற பல தெற்காசிய நாடுகளிலும் தமிழ் பேசப்படுகிறது.

மார்ச் 29, 2023 அன்று, அட்லாண்டா தமிழ் மன்றத்தின் நிறுவனர்கள், நிர்வாக இயக்குநர்கள், செயற்குழு, துணைக்குழுக்கள் மற்றும் இளைஞர் தன்னார்வலர்கள் அடங்கிய உறுப்பினர்கள் குழு ஒன்று ஜார்ஜியா மாநில தலைநகரத்தில் ஆளுநரைச் சந்திக்க கூடியது. அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு குழுவினர் நம் அணியை அன்புடன் வரவேற்றனர். இந்த செயல்பாட்டில் டாக்டர். இந்திரன் இந்திரகிருஷ்ணன் ஆதரவு முக்கியமானது. டாக்டர். இந்திரகிருஷ்ணன் தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட இரைப்பைக்குடலியல் மருத்துவர். அவரது பெருங்குடல் புற்றுநோய் விழிப்புணர்வு மீதான ஆர்வம் ஜார்ஜியா சட்டசபையில் அங்கீகாரத்தைப் பெற்றது. அவர் தற்போது ஆளுநரால் நியமிக்கப்பட்ட ஜார்ஜியா மருத்துவர்கள் பணியாளர் வாரியத்தில் பணியாற்றுகிறார். மேலும், டாக்டர் இந்திரகிருஷ்ணனின் முயற்சியின் காரணமாக ஜார்ஜியாவில் 2018 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதியை தைப் பொங்கல் தினமாக அறிவிக்க ஜார்ஜியா பிரதிநிதிகள் சபை ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியது. டாக்டர் இந்திரனுக்கு மிக்க நன்றி.

உறுப்பினர்களுக்கு ஆளுநர் பிரையன் பி. கெம்ப், திருமதி மார்டி கெம்ப் ஆகியோருடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது.அட்லாண்டா தமிழ் மன்றத்தின் தலைவர் பவித்ரா நடராஜன் மற்றும் நிறுவனர் தங்கமணி பால்ச்சாமி ஆகியோர் ஆளுநரிடம் தமிழ் புத்தாண்டின் முக்கியத்துவம் குறித்து சில வார்த்தைகளைப் பகிர்ந்து கொண்டு, தினத்தைச் சிறப்பித்ததற்கு நன்றி தெரிவித்தனர்.

தங்கமணி பால்ச்சாமி, பவித்ரா நடராஜன் ஆகியோரிடம் கையெழுத்திட்ட பிரகடனத்தை ஆளுநர் மற்றும் திருமதி ஆளுநர் வழங்கினர்.கூடமும் படிக்கட்டுகளும் பாரம்பரிய உடைகளை அணிந்திருந்த ஆண்களாலும் பெண்களாலும் பண்டிகைத் தோற்றம் கொண்டன. ஏற்கனவே அலங்கரிக்கப்பட்ட மாநில தலைநகரக் கட்டிடத்தை இவர்களின் தோற்றம் வண்ணங்களின் அலங்கரித்தது. பட்டு வேட்டி சட்டை அணிந்த ஆண்களையும், பட்டுப் புடவை அணிந்த பெண்களையும் விட நம் கலாச்சாரத்தை வெளிக்காட்ட வேறு சிறந்த வழி எதுவுமில்லை. இது பார்ப்பதற்குக் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. பார்வையாளர்கள் வியப்பில் ஆழ்ந்தனர்!

இந்த ஆண்டு அட்லாண்டா தமிழ் மன்றம், தமிழ் புத்தாண்டை ஏப்ரல் 23 ஆம் தேதி சித்திரைத் திருவிழாவாகக் கொண்டாடுகிறது. அன்றுதான் அட்லாண்டா தமிழ் மன்றத்தின் திறப்பு விழாவும் நடைபெறுகிறது. பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்புப் பட்டிமன்றமும் திட்டமிடப்பட்டுள்ளது. கூடுதலாக, விருந்தினர்கள் வாழை இலையில் வழங்கப்படும் சுவையான பாரம்பரிய விருந்தையும் அனுபவிக்க முடியும். அட்லாண்டா தமிழ் மன்றம் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் இந்த கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்குபெறவும் ‘தமிழ் புத்தாண்டு’ கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளவும் அன்புடன் அழைக்கிறது.

– அட்லாண்டாவிலிருந்து தங்கமணி பால்ச்சாமி

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.